சென்னை:சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கடந்த 25ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கில் கருக்கா வினோத்தை 7 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதனையடுத்து கிண்டி காவல்துறை கருக்கா வினோத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது மேலும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.