சென்னை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டன. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.
ஆனால், இந்த புதிய பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், “பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.