சென்னை: ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பிஹெச்டி படித்தார். மேற்குவங்காளத்தைச் சேர்ந்த அந்த மாணவி ஐ.ஐ.டி. விடுதியில் தங்கிப் படித்து வந்தார். இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய குற்றவாளியான மேற்குவங்காளம், டைமண்டு ஹார்பர் மாவட்டம், ராய்நகரைச் சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து தமிழ்நாடு தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை மேற்குவங்க மாநிலம், டைமண்டு ஹார்பர் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தி, சென்னை அழைத்துவர அனுமதி கேட்டார்கள்.
ஜாமீன் மறுக்க கோரிக்கை:ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளதால் அதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்துவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், கிங்சோ தெப்சர்மாவிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டூர்புரம் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.