சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் துறையினர் மீது லஞ்ச புகார் எழுந்துள்ளது. ‘நேர்மையான காவலர்கள்’ என்ற பெயரில் சமூக வலைதளத்தில் புகார் மனு ஒன்று பரவிவருகிறது. அதில், “சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்கள் ஆகியோர் மாதந்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டு, லஞ்சம் கொடுக்கும் காவலர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் நேரத்தில் ரோந்து பணி வழங்குகின்றனர்” என அந்த புகார் மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் துணை ஆணையர்கள், ரோந்து பணியிலுள்ள காவலர்களை காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அழைக்கும்போது, அவர்களை உஷார்படுத்தவும், வேலை செய்யாமல் இருக்கும் ரோந்து காவலர்களை தப்பிக்க வைக்கவும் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் உதவியுள்ளனர். இதற்கு கட்டுப்பாட்டு அறை காவலர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.