சென்னை:தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு, சுமார் 234 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு தடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் மார்க்கமாக கட்டப்பட்ட ஒரு வழி மேம்பாலம் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெருங்களத்தூர் - நெடுங்குன்றம் மார்க்கமாக செல்லும் மேம்பாலமும், பெருங்களத்தூர் சீனிவாசா நகர் மார்க்கமாக செல்லக்கூடிய மேம்பாலமும் இரண்டு ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது பெருங்களத்தூர் - சீனிவாசா நகர் செல்லக்கூடிய மேம்பாலப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாகப் பணிகள் முடிக்கப்பட்டு மேம்பாலம் திறக்கப்படாமல் பேரிக்காடுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு மேம்பாலத்தை அதிகாரிகள் மூடி வைத்திருந்தனர். இதனால் சீனிவாசா நகர், ஆர்.எம்.கே நகர், முடிச்சூர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பெருங்களத்தூர் ரயில்வே கேட் வழியாக கடந்து செல்லும் சூழல் நிலவி வந்தது.
இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும், பாலம் பணிகள் காரணமாக மாணவ, மாணவியர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என ஏராளமானோர் தாங்கள் சுற்றிச்செல்வதால், எங்கள் பணிக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல முடியவில்லை என குற்றம்சாட்டினர்.