சென்னை:தியாகராயநகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அதிகாலையியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றார்.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபர் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான கருக்கா வினோத் என்பதைக் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசித் தப்பியோடிய கருக்கா வினோத் என்பவரை மாம்பலம் காவல் துறையினர் கைது செய்தனர்.
நீட் தேர்விற்கு ஆதரவு தந்ததால் குண்டு வீசினேன்..!
இதற்கிடையே பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யவும், அலுவலகத்திற்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் பாஜக தலைமை அலுவலகச் செயலாளர் சந்திரன் மூலம், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்திடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைபாட்டுக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.