அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் இணை இயக்குநர், பெண் அலுவலர் உள்பட ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வுத் துறையில் பணிபுரியும் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
சென்னையில் உள்ள அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். மேலும் தேர்வுத் துறை இயக்குநர் அறையில் உள்ள மற்றொரு அறையில் ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி இயக்குநருடன் பணிபுரிந்துவந்த தட்டச்சர், ஒரு அலுவலருக்கும் கரோனா நோய் கண்டறியப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இந்த நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அலுவலர் ஒருவருக்கு நேற்று கரோனா உறுதியானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சென்னை தேர்வுத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றிவருபவர் தனது சொந்த ஊரான தருமபுரிக்குச் சென்றார். அங்கு அவருக்கு உடலில் அறிகுறி இருந்ததால் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு கரோனா தீநுண்மி தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஆனால் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை. இன்று வெளியாகும் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இவருக்கு நோய் இருப்பது அறிவிக்கப்படும்.