சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் டிசம்பர் 27ஆம் தேதிமுதல் பிப்ரவரி 12ஆம் தேதிவரை சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி அரசின் இம்முடிவிற்குத் தடை விதிக்கக்கோரி, கோயிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், சனீஸ்வர பகவான் கோவில் தனி அலுவலரான அர்ஜுன் சர்மா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சனிப்பெயர்ச்சி தினமான 27ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில், பக்தர்களின் வசதிக்காக மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசை அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பக்தர்களைக் கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவிலை மூட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், மத உணர்வுடைய பக்தர்களின் வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசனத்திற்கு ஒரு நாள் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவர் என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்த், முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும், மாவட்ட நிர்வாகம், ஆளுநர், கோயில் நிர்வாகம் அடங்கிய குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, அனைவரும் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் எனக்கூறி, இவ்வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.