சென்னை:சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறும் 'நவராத்திரி கொலு'வைக் காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில், 'நவராத்திரி கொலு - 2023' அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24, 2023 வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15, 2023 அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிவிப்பில், 'ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் மனதார வரவேற்கப்படுகின்றனர்.
நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை rbnavaratrifest@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.