தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 3,200 சிலைகளை வைக்க அனுமதி - சென்னை

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,200 சிலைகளை வைக்க தற்போது வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 3200 சிலைகளை வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகரில் 3200 சிலைகளை வைக்க அனுமதி

By

Published : Aug 31, 2022, 10:35 AM IST

சென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகை இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி இன்று (ஆக். 30) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், கொண்டாட்டங்களை நடத்தவும் இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, அந்தந்த பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், விழா நடத்தவும் மாநகராட்சி, காவல் துறை மற்றும் மின்சார வாரியத்தில் தடையில்லா சான்று பெற வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில் சென்னையில் இதுவரை 2 ஆயிரம் சிலைகளுக்கும், தாம்பரத்தில் 700 சிலைகளுக்கும், ஆவடியில் 500 சிலைகளுக்கும் என மொத்தம் 3 ஆயிரத்து 200 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னையில் 992 சிலைகள் தற்போது வரை ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10 அடிக்கு மிகாமல் சிலை இருக்க வேண்டும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகள் பயன்படுத்தக் கூடாது, ரசாயனப் பூச்சு பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இந்த வழிகாட்டுதல்களை மீறியோ, முறையான அனுமதி பெறாமலோ சிலைகளை வைத்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்காக சென்னையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள திருவல்லிக்கேணி, தி.நகர், ஜாம்பஜார் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் அந்தந்த காவல் மாவட்டத்தின் இணை ஆணையர் தலைமையில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 4ஆம் நாள் சிலைகளை கரைக்க சென்னை காவல் மாவட்டத்தினுள் திருவொற்றியூர், காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை என 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னையில் 5 ஆயிரத்து 200 சிலைகள் வைக்கப்போவதாக 65 இந்து அமைப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2 ஆயிரம் சிலைகளுக்கு மட்டுமே தற்போது வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்திக்கு ஆளுநர் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details