சென்னை: இன்று ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தன.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? பொதுக்குழுவை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்? பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்? என்பது குறித்து விரிவான பதில் அளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள், ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து பொதுக்குழுவில் முடிவெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில், 2190 பொதுக்குழு உறுப்பினர்களும் ஜூலை 11 கூட்டம் நடத்த ஒப்புதல் அளித்ததால் பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் தீர்மானங்களை ரத்து மற்றும் ஒற்றை தலைமை குறித்து முன்மொழிய தலைமை கழகத்திற்கு உரிமை உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும், கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென்றால் மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.
கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. திருத்தங்கள் பொதுக்குழுவில் வைக்கப்படாததால் அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலும் செல்லாது. அதனால் இரு பதவிகளும் காலியாகி விட்டன என தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.
2016ல் கட்சி நிர்வாகிகள் மூலமாக தான் வி.கே. சசிகலா இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யபட்டார்.
30 ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ல் இறந்த பிறகு இடைக்கால பொது செயலாளராக சசிகலாவை நியமிக்க தலைமை கழக நிர்வாகிகள் பரிந்துரை செய்தனர். பின்னர் 2016 ஜூலையில் கூட்டப்பட்ட பொதுக்குழுவிற்கும் தலைமை கழக நிர்வாகிகள் தான் அழைப்பு விடுத்தனர். அதனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவை என்பது கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.