சென்னை:நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க புதிய உரிமம் வழங்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடந்த கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஜெயச்சந்திரன் ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரானைட் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். சகாயம் பொருத்தமான நபர் இல்லை என்றும், அவர் அளித்த அறிக்கையே கையில் கிடைக்காத நிலையில், அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து, விதி மீறியவர்கள் என அனைத்து குவாரிகளையும் மூடியுள்ளதாகவும் வாதிட்டார்.
சகாயம் பரிந்துரைத்துள்ள 80 முதல் 90 விழுக்காடு வரையிலான பறிமுதல் (Recovery) விழுக்காடு என்பது அபரிமிதமானது என்றும், அது ஏற்க கூடியது அல்ல என்றும் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவின்படி மாநில - மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சட்ட ஆணையர் சகாயம் அளித்த 212 பரிந்துரைகளில், 131 மட்டுமே தமிழ்நாடு அரசால் ஏற்க கூடியது என்றும், 67 ஏற்க கூடியது அல்ல என்றும் விளக்கம் அளித்தார். மீதமுள்ள 14 பரிந்துரைகள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியவை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
சகாயம் அறிக்கை குறித்த அரசின் நிலைப்பாட்டை ஆராயும் வகையில் பொதுவான ஒரு வழக்கறிஞரை நியமித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் யோசனை தெரிவித்தார்.
மேலும், மதுரை மாவட்டத்தில் வழக்கில் தொடர்புடைய குவாரிகளைத் தவிர பிற குவாரிகள் இயங்குவதாகவும், புதிய இடங்களில் குவாரிகள் அமைக்க உரிமம் வழங்குவது குறித்து யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உயர் நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, சிறப்பு அலுவலர் சகாயம் நியமிக்கப்பட்டு, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த பின், அவரது பரிந்துரைகளை ஏற்க கூடாது என கிரானைட் உரிமையாளர்கள் எப்படி கோரமுடியும் என கேள்வி எழுப்பினர்.
மேலும், கிரானைட் உரிமம் வழங்குவது குறித்து மத்திய அரசின் அமைப்பு மட்டுமே முடிவெடுக்க முடியும் என தெரிவித்த நீதிபதிகள், சகாயம் குழுவின் அறிக்கை கிடைக்காவிட்டாலும், ஏற்கனவே வழக்கு பதிந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளதாக கிரானைட் உரிமையாளர்கள் தரப்பிற்கு தெளிவுபடுத்தினர்.
குறிப்பாக கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமாகும் வகையில், அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக சகாயம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதையும், யானை மலை மட்டுமே மிச்சமுள்ளதாகவும், அதிலும் சில பகுதிகள் வெட்டப்பட்டதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகள் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்களில் அந்ததந்தப் பகுதிகளில் கிடைக்கும் கனிமங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதை தடுக்க வேண்டுமெனவும், அவற்றை கண்காணிப்பதற்காகவே எல்லைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் உத்தரவை பிறப்பித்ததாகவும் குறிப்பிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் புதிய இடங்களில் கிரானைட் குவாரிகளை தொடங்க நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய உரிமம் வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'மலைகள் மண்ணாவது பூமிக்கே உலை' - சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்