சென்னைவிமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், சர்வதேச முனையம் மற்றும் பழைய விமான நிலையம் சேர்த்து மொத்தம் 110 விமானங்கள் நிற்கும் நிறுத்த மேடைகள் (Parking Bay) அமைந்துள்ளன. இதில் ஒன்றிலிருந்து பத்து வரை பழைய விமான நிலையத்தில் அமைந்துள்ளது.
அதில் விவிஐபிகளின் தனி விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் நிற்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள 100 நிறுத்த மேடைகள் சென்னை உள்நாட்டு முனையம் மற்றும் சர்வதேச முனையங்களில், முதல் ஓடு பாதை மற்றும் இரண்டாவது ஓடு பாதைகளில் அமைந்துள்ளன.
இதில் 19வது நிறுத்த மேடையிலிருந்து 35வது நிறுத்த மேடை வரையிலான 17 நிறுத்த மேடைகளில் நிற்கும் விமானங்களில், பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏரோ பிரிட்ஜ் வசதிகள் உள்ளன. மற்ற நிறுத்த மேடைகள் அனைத்தும் Open bayக்கள் எனப்படும் திறந்தவெளி நிறுத்த மேடைகளாக உள்ளன.
இதில் நிற்கும் விமானங்களில் பயணிகள் ஏறி இறங்க லேடா் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் பயணிகள் விமானங்களில் ஏறுவது இறங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்க சிரமப்படுகின்றனா்.
இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே சென்னை விமான நிலையத்தில் கூடுதல் ஏரோ பிரிட்ஜ்கள் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் புதிதாக கட்டப்படும் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், “தற்போது புதிதாக ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அதிநவீன விமான முனையத்தில் எழு பிக்ஸ் லிங்க் பிரிட்ஜ்கள் எனப்படும் நிரந்தர இணைப்பு பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டடத்தில் மூன்றும், இரண்டாவது கட்டடத்தில் நான்கும் என்று ஏழு பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. ஏரோ பிரிட்ஜ்கள் மூலம் பயணிகள் ஏறி இறங்கும்போது, அது இணைக்கப்பட்ட ஒரு விமானத்தில்தான் பயணிகளால் ஏறி இறங்க முடியும். ஆனால் தற்போது புதிதாக அமைக்கப்படும் நிரந்த இணைப்பு பாலங்கள் Multiple Aircraft Ramping System மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட விமானங்களில் பயணிகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது.
இதனால் இந்த புதிய பாலத்தை ஒரே நேரத்தில் அதிகமான பயணிகள் பயன்படுத்த முடியும். இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைக்கும்” என்றார்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையின் நீளம் அதிகரிப்பு - ஏர்பஸ் ஏ-380 வந்து செல்ல ஏற்பாடு