சென்னை: கலைவாணர் அரங்கத்தில் இன்று (2.12.2022) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில், பெரியார் பன்னாட்டு அமைப்பு - அமெரிக்கா சார்பில் “சமூக நீதிக்கான கி. வீரமணி விருது” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவ்வமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம இளங்கோவனால் வழங்கப்பட்டது.
இந்த விருது 1996ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங், 1997ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. சீதாராம் கேசரி, 2000ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் செல்வி மாயாவதி, 2008ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர், 2015ஆம் ஆண்டு பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. நிதீஷ் குமார் போன்ற தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் தீபத்திருவிழா - 6ஆம் நாளில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்!