தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் ஏன் இன்றும் தேவைப்படுகிறார்?

‘கும்பிட்றேன் சாமி’ என்ற அடிமை சொல்லை அழித்தொழித்து ‘வணக்கம்’ என்னும் சுயமரியாதை சொல்லை வழக்கத்தில் கொண்டு வந்த மானமிகு சுயமரியாதைக்காரன் தந்தை பெரியார் இம்மண்ணில் பிறந்து இன்றுடன் 140 ஆண்டுகள் ஆகின்றன.

periyar

By

Published : Sep 17, 2019, 7:24 PM IST

Updated : Sep 17, 2019, 7:33 PM IST

இதில் அவர் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள். அந்த காலகட்டத்தில் தற்போது உள்ளதுபோல் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற வெகுஜனத்தை எளிதில் சென்றடையக்கூடிய சமூகவலைதளங்கள் கிடையாது. தொலைக்காட்சி கிடையாது. வெறும் பத்திரிகைதான். அதன் மூலமும் மேடைப் பேச்சுகளின் மூலமும் ஒரு மனிதனின் கருத்துகள் இச்சமூகத்தில் இத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால் இது அந்த தனி மனிதனின் சாதனை அல்ல.

கைத்தடியும் பெரியாரும்

அவர் ஒரு கருத்தியல். அந்த கருத்தியல் எளிய மனிதர்களுக்கானது. சுயமரியாதை ததும்பக்கூடியது. மனிதனை மனிதனாக பார்க்க விடாமல் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி அதன் மூலம் சுகம் கண்ட சிலரின் அடிவேரினை அசைத்து பார்க்கக்கூடிய திடம் அவரது கருத்தியலுக்கு இருந்தது.

அதுவரை யாருக்கும் தோன்றாத எண்ணம் அவருடையது. தமிழ் நிலம் அதுவரை கேட்டிடாத சொற்பொழிவுக்கும் சிந்தனைக்கும் சொந்தக்காரர் அவர்.

அதனால்தான் பாவேந்தர் பாரதிதாசன்,

“தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார்”

என்று பெரியாரை இப்படி கொண்டாடி மகிழ்ந்தார்.

பெரியார்

குறிப்பாக, பெரியாரின் தனித்துவமே அவர் யார் மீதும் தனது கருத்துகளை திணித்ததில்லை. அவரின் கருத்துகள் இந்த அளவுக்கு சென்றடைந்து, இச்சமூகத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த அவரின் இந்த கொள்கையும் காரணம் என்பதே அவர் குறித்த ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பலரின் கருத்தாக இருக்கிறது.

அதனை தன்னுடைய விடுதலை ஏட்டில் பெரியாரே இப்படி குறிப்பிடுகிறார்:

“நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.

பெரியார்

ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.

ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக்கொள்வதில் மட்டும் பயனில்லை; அவைகளை சிந்தனையில் கொண்டு அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை” என்றார்.

பெரியார்

இன்றும் அவர் கடைபிடித்த இதுபோன்ற சுயமரியாதை கொள்கைகள்தான் வடக்கில் இருந்து தமிழ்நாட்டை பார்க்கும் பலருக்கு எரிச்சல் தரக்கூடியதாக இருக்கிறது. அதில் நியாயமும் இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கு ஒரு பெரியார் இல்லையே. அவர்கள் பெரியவர்களாக ஏற்றுக்கொண்டவர்கள் எல்லாம் மற்றவர்களை சிறியவர்களாகவே கருதினர். பெரியார் மட்டும்தான் சமநிலையை கடைபிடித்தார். தனி மனிதனின் அடிப்படை சுதந்திரமே அடிமைப்படாமல் இருத்தல்தானே!

ஒருவேளை பெரியார் இன்று இருந்திருந்தால், தற்போது உள்ள சமூக ஊடகங்கள் மூலம் அவர் இந்தியாவுக்கான முகமாக மாறியிருப்பார். இந்தியா முழுவதும் தனது சுயமரியாதை கருத்துகளை விதைத்திருப்பார். ‘Personality Cult’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் தனி மனித சார்புத்தன்மைதான் பெரியார் கற்றுக்கொடுத்த அரசியலா? அவருடைய புகைப்படத்தை வைத்து அரசியல் செய்யும் அவரின் வழித்தோன்றல்களின் தோல்வியா? என்பது போன்ற டிபேட் தலைப்புகள் இந்த இடத்தில் எழுவது இயல்புதான்.

அண்ணா - பெரியார் - கலைஞர்

ஆனால், அந்த கருத்தியல் இன்றும் உயிரோடு இருப்பதால்தான் அவரது சிலை உடைக்கப்படுகிறது. அதன் மீது காலணிகள் வீசப்படுகின்றன. வங்கத்து எழுத்தாளர்களும் அவரை கொண்டாடுகின்றனர். உத்தரப் பிரதேச பத்திரிகையாளர்கள் அவரை போற்றுகின்றார். பிரதமர் வேட்பாளராக களத்தில் உள்ள ராகுல் காந்தி, ‘பெரியாரின் புத்தகங்கள் எனக்கு வேண்டும், அவரின் கருத்தியலை நான் கற்று இந்தியாவை முன்னேற்ற முயல்வேன்’ என பிரசார மேடையில் பகிரங்கமாகப் பேசுகிறார்.

ஆனால், என்றுமே ஒரு பெரியார்தான். ஒரு அம்பேத்கர்தான். அவர்களின் கருத்துகளை ஏற்பதாலும், அவர்களின் கருத்துகளை பரப்புவதாலும் மட்டும் அனைவரும் பெரியார்களும் அம்பேத்கர்களுமாக ஆகிவிட முடியாது. ஏனெனில் பெரியார் குறித்து பேசுவது எளிது ஆனால் பெரியாராய் வாழ்வது கடினம்.

அண்ணலும் அய்யாவும்

மாநில சுயாட்சியை குழிதோண்டி புதைக்கும் விதமான நீட் தேர்வு, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, கல்வி முறையில் கை வைப்பது, தேசத்தின் பல்வேறு மொழிகளைப் போன்றதொரு மொழியான ‘இந்தி’யை அரசியலுக்காக அனைத்து மாநிலங்களிலும் திணிக்க முயல்வது, சிறு குறு தொழிலாளர்களுக்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகள் என சாமானியர்களின் அடிவயிற்றில் இன்றும் பலர் அடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அதுதான், பெரியார் இன்றும் தேவைப்படுவதற்கான அவசியமாகிறது. அதுவே பெரியாரின் வெற்றியும் கூட.

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை எந்த மாநிலம் எதிர்க்கிறதோ இல்லையோ, பெரியார் என்ற வீரிய விதையால் தமிழ்நாடு இன்றும் எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அடிமைகள் அப்போதும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இதில் வியக்கத்தக்கது என்னவென்றால் ஆட்சி அதிகாரத்திலும் இப்போது அடிமைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகட்டும் விடுங்கள், ஜனநாயக நாடு என்று நம்பப்படும் இந்தியாவில் ஐந்து வருடங்கள் மட்டும்தானே ஆட்சியும் அதிகாரமும்.

அண்ணாவும் பெரியாரும்

சாமி கும்பிடுவதற்கு எதிரானது இல்லை பகுத்தறிவு, கும்பிட்றேன் சாமி என்பதற்கு எதிரானதுதான் பெரியாரின் பகுத்தறிவு. பெரியார் ஒரு வரலாற்று நிகழ்வு. அந்த நிகழ்வு யுகத்திற்கு ஒருமுறைதான் நடக்கும். எனவே இந்த யுகத்திற்குள் பெரியாரை மேலும் திடமாகத் தாங்கிப்பிடித்து சண்டை செய்வோம்... அவர் சாதித்ததில், சாதிக்க நினைத்ததில் பாதியையாவது சாதிக்க முயல்வோம்!

Last Updated : Sep 17, 2019, 7:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details