சென்னை:பேரறிவாளன் விடுதலையும், தொடர்ந்து ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள – நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரையும் விடுவிக்க திமுக தீவிரம் காட்டுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டார்.
விடுதலையான பேரறிவாளனை, முதலமைச்சர் பொன்னாடை போர்த்தி ஆரத்தழுவி தன்னருகில் அமரவைத்து பேசியதை, காங்கிரஸ் ரசிக்கவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில் ஏழு தமிழர் விடுதலையும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இது குறித்து பேசாத காங்கிரஸ், தற்போது பேசுபொருளாக்குவது கேள்விகளை எழுப்புகிறது.
2019 நாடாளுமன்றத்தேர்தல் முதல் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகள் இருக்கின்றன. திமுகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் அந்த கூட்டணியில் பலமாக உள்ளது. அதுமட்டுமின்றி கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 18 சட்டமன்ற உறுப்பினர்கள், 8 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, திமுக-வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமன்றி, பாஜக தவிர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை வரவேற்றுள்ளன. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் தனிமைப்பட்டுள்ளது. ஒரு சில காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்து, கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட்டணி என்பது தொடரும் என காங்கிரஸ் மேல்மட்ட நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். அதுமட்டுமின்றி கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி கூட தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பேசிய அவர்: "இந்த விவகாரத்தில் எங்களை தவிர எங்கள் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றன. இந்த விவகாரத்தில் நாங்களும் அவர்களும் வேறுபட்டு இருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியாதா? அனைவருக்கும் அனைத்தும் தெரியும். இதை விட பெரிய நோக்கத்திற்கு இந்த கூட்டணியை கொண்டு சென்று உள்ளோம். எனவே கொள்கை வேறு, கூட்டணி வேறு. அவர்கள் கொள்கையை அவர் பேசுகின்றனர் எங்களுடைய கொள்கையை நாங்கள் பேசுகிறோம்” என்று விளக்கமளித்தார்.