முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் இதுவரையில் 9 முறை பரோலில் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு சட்டபோராட்டங்களுக்கு பிறகு இன்று(மே 18) உச்ச நீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை அளிப்பதாக தீர்ப்பை அறிவித்தது.
இந்நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் தனது வீட்டில் பேரறிவாளனுக்காக உயர்நீத்த செங்கொடி மற்றும் அவருக்காக வாதாடிய கிருஷ்ண ஐயர் ஆகியோர் படத்திற்கு மாலை அணிவித்து, அவரது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இனிப்புகளை வழங்கி விடுதலையைக் கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பேரறிவாளன்,
”அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்”
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது வாழ்நாளில் தனக்காக தனது தாய் அனுபவித்த துன்பங்களையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து பேசிய அவர், ”இதுவரையில் என்தாயின் வாழ்க்கையின் பாதி வாழ்க்கையை நான் எடுத்துக்கொண்டது, மிகுந்த வருத்தமளிக்கிறது. என் தாய்க்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். மேலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பேரறிவாளன் நிரபராதி என எனக்காக குரல் கொடுத்த முகம் தெரியாத அனைவருக்கும் நன்றி.
நீதிபதி கிருஷ்ணய்யர் பற்றி நான் சொல்ல வேண்டும். அவர் மிகப்பெரிய நீதிமான், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளைக் கொடுத்தவர். இன்று நான் விடுதலை ஆவதற்கு அவர் கொடுத்த தீர்ப்பும் தான் முக்கியக் காரணம். அவர் எனக்காக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதினார்.
நான் மண்டியிட்டு கேட்டுக்கொள்கிறேன் என எனக்காக மன்றாடினார். அதற்குக் காரணம் அவர் முழுக்க முழுக்க என்னை நிரபராதி என நம்பியது தான். மேலும், எனக்காக தீக்குளித்த சகோதரி செங்கொடியின் தியாகத்தினால் தான் என்னைப் பற்றிய உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.
இதுவரையில் என் மனதில் சட்டப்போராட்டங்களை எப்படி கையாளுவது என்பது பற்றியே சிந்தனைகள் இருந்த நிலையில், தற்போது அதை எல்லாம் தூக்கி எறிந்து சற்று சிறிது காலம் மனதை ஆவேசப்படுத்தி உறவினர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்காலத்தை பற்றி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை -மாநில உரிமையை நிலை நாட்டும் முயற்சியில் வெற்றி : ஸ்டாலின் கூறும் வழக்கின் பின்னணி