சென்னை:பெரம்பூரில் ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான ஜே.எல். கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையில் ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை ஒரு கொள்ளை கும்பல் வெல்டிங் மிஷின் மூலமாக கடையை ஓட்டை போட்டு உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் என்று 6 கோடி மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்து சென்றது. அதோடு நகைக்கடையில் இருந்த சிசிடிவி, டிவிஆர் கருவிகளையும் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக 10 தனிப்படைகள் அமைத்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலியான நம்பர் பிளேட், மங்கி குல்லா, கையுறை அணிந்து வந்து கொள்ளையடித்ததால் கைரேகை சோதனையிலும் துப்பு கிடைக்கவில்லை.
சிசிடிவி கேமராக்களில் சிக்காத வண்ணம் சாலையை தேர்ந்தெடுத்து சென்றதால் அவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரமும் தனிப்படை போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஆந்திரா செல்லும் வழியில் இவர்கள் சென்ற கார் சிசிடிவியில் பதிவானதால், அதனை வைத்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, டெல்லி, ஹரியானா எனப் பல மாநிலங்களில் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதே போன்ற பாணியில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடித்தும் விசாரித்து வந்தனர். ஆனாலும், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குற்றவாளிகள் பற்றிய எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
பல மாநிலங்களுக்கு சென்று இதே போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பற்றி விசாரிக்கும் பணிகளில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த 4 தினங்களுக்கு முன்பாக பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது சந்தேகப்படும்படி வந்த இருவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை செய்த போது, அவர்களிடம் 2.5 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அது பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்டீபன், கங்காதரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர்.
சென்னை பெரம்பூர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த சிறிய துப்புகூட கிடைக்காமல் திணறிக் கொண்டிருந்த சென்னை போலீசார் வேறு வழியின்றி சிசிடிவி காட்சிகளில் சிக்கிய கொள்ளையர்களின் புகைப்படங்களை மற்ற மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். சென்னை போலீசார் அனுப்பிய புகைப்படங்களும் பெங்களூருவில் போலீசார் பிடித்து சிறையில் வைத்திருந்த குற்றவாளிகளும் ஒரே நபர்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து பெங்களூரு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, கர்நாடகா மற்றும் சென்னை பகுதிகளில் கொள்ளையடித்துவிட்டு 6 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றதாக கொடுத்த தகவலின் பேரில், திவாகரன் மற்றும் கஜேந்திரன் ஆகிய மேலும் இருவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.