சென்னை புறநகர் ரயிலில் அத்தியாவசியப் பணியாளர்கள் அல்லாத பெண்கள் இன்று (நவ.23) முதல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று குறைந்த அளவிலான பெண் பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்தனர். ரயில்கள் குறைவாக இயக்கப்படுவதால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணித்தனர்.
ஆட்டோ, பேருந்தில் பயணித்தால் அதிக செலவு ஏற்படுவதால் ரயிலில் பொதுமக்கள் பயணிக்கின்றனர். ஆனால், குறைவான ரயில் இயக்கப்படுவதால் பணிக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை.
பீக் ஹவரில் பத்து நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. விரைவில் ரயில் சேவை அதிகரிக்கப்படும் என தென்னக ரயில்வே அலுவலர்கள் கூறுகின்றனர்.
தற்போது நாளொன்றுக்கு 244 புறநகர் ரயில்கள் சென்னையில் இயக்கப்படுகின்றன. கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 40 சதவீத சேவை மீண்டும் இயக்கப்படுகின்றது.
கரோனா பாதிப்புக்குப்பிறகு சென்னை புறநகர் ரயிலில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டுமே பயணித்து வந்தனர். படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அரசு அனுமதி வழங்கியது.