சென்னை: கோடைக் காலம் துவங்கி பல்வேறு பகுதிகள் வெப்ப நிலை 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சதமடித்து வருகிறது. அதைத் தொடர்ந்தே தமிழ்நாட்டில் கிராமம் முதல் நகரம் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டும் துவங்கிவிட்டது. ஆகையால் மக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சொல்லவே தேவையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் அண்மைக் காலமாகவே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு நேர மின்தடை அதிகரித்திருப்பதாகப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு, மதுரவாயல் போன்ற பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக இரவு நேர மின்தடை ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதாவது அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, புதூர், பாணுநகர், லெனின் நகர், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டதாக பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதை சிலர் சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை இதுவரை எடுக்காததால், ஆத்திரமடைந்த அம்பத்தூர் பகுதி மக்கள் திடீரென மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மின்வாரிய துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.