சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் அக்டோபர் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ்காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்ட தீர்மானம் பின்வருமாறு நாட்டின் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு மற்றும் பொதுநுழைவுத் தேர்விற்கு சிபிஐஎம் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும் மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது.
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதோடு ஒருமைப்பாட்டிற்கும் உலைவைப்பதாக அமைந்துள்ளது. இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பிற்கு வகைசெய்யும் முறையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் அனைத்துப் படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் இந்தி மொழியில் மட்டுமே நடத்தப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது.
இந்தி மட்டுமே பயிற்று மொழியாக:ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு குடியரசுத் தலைவரிடம் 112 பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான பரிந்துரைகள் இந்திமொழியை திணிக்கும் முயற்சியாகவே உள்ளது. குறிப்பாக, ஒன்றிய கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும் என்றும், ஆங்கிலம் விருப்ப மொழியாக மட்டுமே இருக்கும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தி பேசாத மாநில மாணவர்களை ஒன்றிய அளவிலான கல்வி நிலையங்களிலிருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் முயற்சியே இது. ஒன்றிய அரசின் விளம்பரங்கள் 50 விழுக்காட்டிற்கு மேலாக இந்தியில் மட்டுமே இருக்கும் ஐ.நா.வுடனான தொடர்பு மொழியாக இந்தியே இருக்கும் என்பன உள்ளிட்ட அனைத்து பரிந்துரைகளும் இந்து - இந்தி - இந்துஸ்தான் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கோட்பாட்டை திணிப்பதாகவே அமைந்துள்ளன.