தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்ற திட்டமா? வியாபாரிகள் கூறும் விருப்பும்.. வெறுப்பும்..! - காய்கறி மார்க்கெட்டின் ஆலோசகர்

Koyambedu market: கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதை இடம் மாற்றம் செய்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் திட்டத்தைக் கைவிடக்கோரியும் வியாபாரிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றம் செய்ய வேண்டாம் என அரசுக்கு வேண்டுகோள்
கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றம் செய்ய வேண்டாம் என அரசுக்கு வேண்டுகோள்

By

Published : Aug 20, 2023, 10:32 AM IST

கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றம் செய்ய வேண்டாம் என அரசுக்கு வேண்டுகோள்

சென்னை:கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக திகழ்கிறது. இது 1996 ஆம் ஆண்டு பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட்டிற்கு பதிலாக உருவாக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை சென்னையின் அடையாளமாக திகழ்கிறது கோயம்பேடு மார்க்கெட் (Koyambedu market). இந்த மார்கெட் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி வியாபாரிகளுக்கும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளுக்கும் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கிருந்து காய்கறிகளை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து சில்லறை விலைக்கு சென்னை முழுவதும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

சுமார் 85 ஏக்கரில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த கோயம்பேடு மார்க்கெட் திருமழிசை (Thirumazhisai) பகுதிக்கு மாற்றம் செய்வதற்கான ஆய்வு, தனியார் நிறுவனத்தின் மூலம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு 12 கோடி ரூபாய் வருமானம் வரும் இந்த மார்க்கெட்டில் பராமரிப்பு பணிக்காக மட்டுமே 11 கோடி ரூபாய்க்கு மேல் மாநகராட்சி செலவிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பெரிய அளவில் மாநகராட்சிக்கு வருமானம் இல்லை என கூறப்படுகிறது.

காய்களை கொண்டு வருவதற்காக கனரக வாகனங்கள் வந்து செல்வதால் அப்பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், வருமானத்தை அதிகரிக்கும் விதமாகவும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இந்த இடமாற்றத்தை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் கோயம்பேடு மார்க்கெட் இயங்க முடியாத சூழலில், திருமழிசை பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திருமழிசை பகுதியில் மார்க்கெட் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய குஷ்மேன், வேக் பீல்டு ஆகிய நிறுவனங்களிடம் சி.எம்.டி.ஏ தெரிவித்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

மேலும், இந்த இடத்தில் வணிக வளாகம், நட்சத்திர விடுதி, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை கொண்டு வரப் போவதாக கூறப்படுகிறது. இதனால், வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், மேலும் சென்னையின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை, வியாபாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றுவது குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டின் ஆலோசகர் சௌந்தரராஜன், "1996ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, பாரிமுனையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட்டை கோயம்பேட்டிற்கு மாற்றினார்.

அன்றிலிருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இங்கே வியாபாரம் செய்து வருகிறோம். இப்படி எங்களை மாற்றம் செய்து கொண்டே இருந்தால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதால் மாற்றம் செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பு நூறு கோடி செலவில் மேம்பாலம் அமைத்தார்கள். ஆனால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அரசு பணம் தான் வீணானது. வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லையா?. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகனங்கள் அதிகரித்ததற்கு ஏற்ப சாலைகளை அமைக்கவில்லை.

நட்சத்திர விடுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். கொத்தவால் சாவடியில் இருந்து வந்த வியாபாரிகள் தற்போது தான் இங்கு இயல்பான நிலையில் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் எங்களுக்கு 99 வருடம் குத்தகையின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொடுத்து இருக்கின்றனர். திடீரென கோயம்பேடு மார்க்கெட்டை திருமழிசைக்கு மாற்றம் செய்தால், வண்ணாரப்பேட்டையில் இருக்கும் வியாபாரிகள் எப்படி வியாபாரம் செய்வார்கள்?.

அங்கிருந்து கிட்டத்தட்ட 30 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். கோயம்பேடு மார்க்கெட்டை இப்பொழுதுதான் சரியான முறையில் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் தற்பொழுது மாற்றம் செய்வது சரியாக இருக்காது. அதனால் இதை அரசு கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இந்த மார்க்கெட் உருவாகும்போது அம்பத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. மேயர்களாக இருந்த மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சைதை துரைசாமி ஆகியோரிடம் சொத்து வரி கட்டுவது குறித்து கேட்டோம். அவர்கள் இன்னும் அரசாணை வரவில்லை எனக் கூறிக் கொண்டே வந்தனர்.

இதுவரை சொத்து வரி 40 கோடி ரூபாயும், தண்ணீர் வரியாக 20 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளோம். இருந்தும் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. இந்த கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி தென் சென்னை, வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளில் 20 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். சென்னையில் மொத்தம் 47 மார்க்கெட் உள்ளது. இந்த 47 மார்க்கெட்டுக்கும் தாய் வீடாக கோயம்பேடு மார்க்கெட் திகழ்கிறது.

இங்கு வியாபாரம் செய்யும் சில்லரை வியாபாரிகள் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கக் கூடியவர்கள். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் தரப்பில் எங்கள் சங்கத்திடம் ஆலோசனை செய்தனர். நாங்களும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஆலோசனை மேற்கொண்டோம்.

இதில் வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் சுமூகமான முடிவு எடுக்க வேண்டும். கோயம்பேடு மார்க்கெட் உருவாகும்போது இங்கே குறைவான வியாபாரிகள் தான் இருந்தார்கள். இங்கே இருக்கக்கூடிய ஒரு வங்கியில் கடன் வாங்கி கொடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டின் தரத்தை உயர்த்தி வைத்துள்ளோம். அதனால்தான் கோயம்பேடு மார்க்கெட் ஆசியாவில் மிக முக்கியமான மார்க்கெட்டாக திகழ்கிறது.

கோயம்பேடு மார்க்கெட்டை சுத்தம் செய்யும் பணியை நாங்களே மேற்கொள்கிறோம். இதை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை. தண்ணீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. ஆனாலும் அதையெல்லாம் ஒரு குறையாக சொல்லவில்லை. ஆனால் எங்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய தொழிலுக்கு இடையூறு செய்யாதீர்கள். இதற்கு அடுத்த கட்டமாக காய், கனி, பூ ஆகிய சங்கங்களை ஒன்றிணைத்து முடிவு செய்வோம். அதற்கு முன்பாக சுமூக முறையில் அரசை அணுகுவோம். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:ரூ.1000 மகளிர் உரிமை தொகை : கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு!..

ABOUT THE AUTHOR

...view details