சென்னை: பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் வசித்து வருபவர் பவித்ரா. இவர் மகளிர் சுய உதவிக்குழுவை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மூலமாக, அகில இந்திய டாக்டர் அப்துல்கலாம் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பிரான்சிஸ் மற்றும் பொருளாளர் தர்ஷிணி அறிமுகமாகி உள்ளனர்.
இதனையடுத்து, அவர்களது சங்கத்தில் ஆயிரத்து 100 ரூபாய் சந்தா செலுத்தி உறுப்பினராக இணைந்தால் 0.65 பைசா வட்டிக்கு பணம் கடனாக பெற்றுத் தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அறக்கட்டளை மூலமாக குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் 50-க்கும் மேற்பட்ட நபர்களை இதில் இணைத்துள்ளார் பவித்ரா.
குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் கடன் பெற வேண்டும் என்றும், ஒரு லட்ச ரூபாய்க்கு 2ஆயிரத்து 500 ரூபாய் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும் விதிமுறைகளை வகுத்து, பிரான்சிஸ் மற்றும் தர்ஷிணி பணத்தை நேரடியாகவும், ஆன்லைன் (கூகுள் பே) மூலமாகவும் வசூல் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகியும், இதுவரை கடன் வாங்கித் தரமால் இருவரும் அலைக்கழித்துள்ளனர். கட்டிய பணத்தை திருப்பி தராமலும், அதுபற்றி கேட்டால் சரியான விளக்கமும் அளிக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.