கரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்கள் மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத் வரப்படுகின்றனா். கடந்த மாதம் 31ஆம் தேதி வரை அவர்கள் அனைவரையும் மாநில அரசு தனி பேருந்துகள் மூலம் அழைத்துவந்து, அரசு முகாம்கள், ஹோட்டல்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தியது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதையடுத்தும் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து மக்கள் முகாம்களில் கட்டாய தனிமைப்படுத்தும் முறையையும் அரசு நீக்கியது.
எனவே பயணிகள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தனியாா் வேன்கள், காா்கள் மூலம் அவா்களுடைய சொந்த ஊா்களுக்கு சென்றுவருகின்றனா். அவ்வாறு செல்பவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியவந்ததை அடுத்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் இரவு நேரங்களில் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு வருவோரை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல நான்கு பேருந்துகளை இயக்கியது.
அவற்றில் இரண்டு பேருந்துகள் சென்னை விமானநிலையத்திலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரையும், ஒரு பேருந்து சேலம், ஈரோடு வழியாக கோவைக்கும், மற்றோரு பேருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகப்பட்டினம் வரையும் செல்கின்றன. 30 பயணிகள் வரை ஏற்றிச் செல்லப்படும் இந்தப் பேருந்துகளில் ஆயிரம் ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.