சென்னை:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இந்த விடியா அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆகிறது. மக்கள் தினமும் துடித்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஸ்டாலின் நடு நடுங்கி கொண்டு இருக்கிறார். அதனை திசை திருப்ப அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்.
சுமார் 15 வருடங்கள் நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கியவர் ஜெயலலிதா. அதிமுகவின் இரு பெரும் தலைவர்களும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை. தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாற்றியவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எங்களுக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் இருந்த போது இந்த எடப்பாடி ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்து விடும் ஆறு மாதத்தில் கலைந்து விடும் என்று கூறி வந்த நிலையில், அவர்கள் மூக்கு மேல் விரலை வைக்கும் வகையில் 4 ஆண்டுகள் மக்களுக்கான சிறப்பான ஆட்சியை தந்தோம். விபத்தில் வந்த ஆட்சி இந்த திமுக ஆட்சி. ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது, நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பிரம்மாண்டமாக அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உள்ளது இந்த திமுக அரசு. வீட்டு மக்களுக்காக உள்ள கட்சி திமுக, நாட்டு மக்களுக்காக உள்ள கட்சி அதிமுக. மக்களுக்கு ஜெயலலிதா என்று சொன்னால் ஞாபகம் வருபவர் ஜெயலலிதா மட்டுமே. ஸ்டாலின் மனதில் ஈவு இரக்கமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார். ஆட்சிக்கு வரும் முன் ஒரு பேச்சு ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு பேசுவது தான் திராவிட மாடல்.
விஞ்ஞான மூளை படைத்த கட்சி திமுக. மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் சுமையை உயர்த்தி உள்ளது இந்த விடியா அரசு. 2011-ல் எங்கள் ஆட்சி போகும் என்றால் அது மின்வெட்டால் என்று முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாக்கு மூலம் கொடுத்தார். அது போலவே அவர்கள் ஆட்சி மாறியது. தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் போது அண்டை மாநிலத்தில் இருந்து மின்சாரம் வாங்கி வழங்கிய அரசு அதிமுக அரசு.