சென்னை:மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மதுரவாயல் தொகுதி திமுக எம்எல்ஏ கணபதி அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிடவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பென்ஜமின் வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமா நகர், சக்தி நகர் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும், அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது வீட்டிற்குள் முடங்கி இருந்த ஒருவர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், பூர்த்தி செய்து தருமாறு முன்னாள் அமைச்சர் பெஞ்சமினிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து மின்சாரம் வருவதற்காக வழிவகை செய்யப்படும் என அப்பகுதி மக்களுக்கு முன்னாள் அமைச்சர் பென்ஜமின் ஆறுதல் கூறினார். மேலும், மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வழிவகை செய்யுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை தற்போதைய எம்எல்ஏ கூட வந்து பார்க்காத நிலையில், முன்னாள் அமைச்சர் வந்து பார்வையிட்டது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்த போது பகுதி கழக செயலாளர் தேவதாஸ், ஒன்றிய கழக செயலாளர் ராஜா உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.