தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொதுப் பாடத்திட்டம்' என்ற முடிவை உடனே கைவிடுக - மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கை - பல்கலைக்கழகம்

அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கல்விக் கூட்டியக்கம் கோரிக்கை
’பொதுப் பாடத்திட்டம்’ என்ற முடிவை உடனே கைவிடுக

By

Published : Jul 26, 2023, 8:50 PM IST

சென்னை:தமிழக அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் அமல்படுத்த உள்ள 'பொதுப் பாடத்திட்டம்' என்ற முடிவை உடனே கைவிட வேண்டும் என மக்கள் கல்விக் கூட்டியகத்தினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், ''தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்ட முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பொதுப்பாடத்திட்டம் இக்கல்வியாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இது கல்விப் பரப்பில் ஜனநாயகத்தை மறுக்கும் செயல் என மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டிற்கென தனித்துவமான கல்விக்கொள்கை உருவாகிவரும் வேளையில் 'பொதுப்பாடத்திட்டம்' என்ற அறிவிப்பை செய்து அதனை அவசரகதியில் திணிப்பது ஏன்?. தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதாகக் கூறினாலும் அதன் பரிந்துரைகளை அமல்படுத்துவது ஏன்?

உயர் கல்வி அமைச்சர் பொன்முடி பொதுக்கல்வி திட்டத்தினால் மாணவர்கள் இடமாறுதலாகி வேறு கல்வி நிலையங்களில் படிப்பைத் தொடர இது உதவியாக இருக்கும் என்று சொல்கிறார். இது ஏற்கத்தக்க வாதம் அல்ல. பொதுவாக இடமாறுதலாகும் மாணவர்களுக்கு சமநிலை சான்றிதழ் (equivalence certificate) வழங்கப்படுகிறது. அவர்கள் வேறு கல்வி நிறுவனத்தில் சேர்வதும் பெரும் பிரச்னையாக இல்லை. இது குறித்த புகார்களோ பெரியளவில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதைக் காரணம் காட்டி கல்வித்துறையில் ஜனநாயத் தன்மையை முற்றிலுமாக ஒழிப்பதை ஏற்கமுடியாது.

உலகம் முழுவதும் மாறிவரும் சமூக, பண்பாட்டு மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப கல்வித்துறையில் புதுப் புது துறைகள் உருவாகி வருகின்றன. அவற்றிற்கு ஏற்ற பாடத்திட்டங்களை பல்கலைக்கழகங்கள் தங்களுடைய பிரத்யேக கல்வித்திட்டக் குழுக்கள் மூலம் தகுந்த வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி கல்விப்பேரவை, ஆட்சிக்குழு போன்ற பல அடுக்குகளில் விவாதித்து நடைமுறைக்குக் கொண்டு வருகின்றன.

இதையும் படிங்க:பால்கனி விபத்தை பார்வையிட வந்த திமுக பெண் கவுன்சிலர் - வட்டச்செயலாளர் இடையே மோதல்!

பல்கலைக் கழக மானியக் குழுவே கூட பாடத்திட்டங்களின் வடிவமைப்பை மட்டுமே வழிகாட்டுதலாக முன்வைக்குமே தவிர, அதை அப்படியே கடைப்பிடிக்க வலியுறுத்துவதில்லை. தமிழகத்தில் தான் அதிக அளவில் தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன. அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியே புதுமையான மற்றும் தரமான பாடத்திட்டங்களை உருவாக்கி, கற்பிக்கப்படலாம் என்பதுதான்.

அகில இந்திய அளவிலான தரவரிசையில் மூன்றாம் இடம் பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாநிலக் கல்லூரி ஒரு தன்னாட்சிப் பெற்றக் கல்லூரிதான். அரசின் இந்த பொதுப்பாடத்திட்ட முடிவு இதன் தனித்துவத்தை நிச்சயம் பாதிக்கும். தமிழகத்தில் ஒரு புறம் தன்னாட்சிக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மறுபுறம் பாடத்திட்டத்தில் தன்னாட்சியை மறுப்பதும் குழப்ப நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தில் உயர் கல்வியின் தரத்தை மிகவும் பாதிக்கும் என எச்சரிக்கிறோம்.

தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களிலும் ஒரே பாடத்திட்டம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்னதாக அது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தை தமிழக அரசோ, தமிழக உயர் கல்வி மன்றமோ நடத்தவில்லை. பாடத்திட்ட வடிவமைப்பில் பல வல்லுநர்களின் பங்கேற்பு மறுக்கப்பட்டு, சிலர் மட்டுமே ஒட்டுமொத்த தமிழகத்தின் உயர்கல்வி பாடத்திட்டங்களை உருவாக்கும் சர்வாதிகார அமைப்பு உருவாவதற்கு இது வழி வகுக்கும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் தனித்துவமான கல்விக் கொள்கை உருவாகும் வரை கல்வித் திட்டங்களில் எவ்வித மாற்றங்களும் செய்யக் கூடாது என வலியுறுத்துகிறோம். மாணவர்களுக்கு தரமான உயர் கல்வியை வழங்கும் ஆக்கப்பூர்வமான பணியில், தமிழ்நாடு அரசு கவனத்தைக் குவித்து செயல்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.

அந்த வகையில், தற்போது அரசுப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் அடிப்படை, பணியாளர்களை நிரந்தரமாக நியமித்து கல்லூரி மற்றும் மாணவர்கள் சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களை வைத்துத்தான் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறையை ஈடுகட்டமுடியும் என்ற நிலை நீடிக்கிறது.

ஆனால், அவர்களுக்கான சம்பளம் ஒரு கொத்தனார் வாங்குவதைவிடக் குறைவுதான். அண்டை மாநிலங்களில் சுமார் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.57,500 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும்போது தமிழகத்தில் வெறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 5 ஆயிரம் ரூபாய் உயர்த்துவதாக அமைச்சர் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல.

கௌவுரவ விரிவுரையாளர்களை கொத்தடிமைகளைப் போல் பயன்படுத்தி வரும் அவலத்திற்கு உடனே முடிவு கட்டி யு.ஜி.சி அறிவித்துள்ள ரூ.57, 500 வழங்கி அவர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கழகங்கள் மூலம் கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்கும் தவறான முறையை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அதேபோல் தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அங்கு பணியாற்றக் கூடிய பேராசிரியர்களின் ஊதியத்தை அரசே நிர்ணயித்து அவர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்க வழங்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-யை முற்றிலுமாக நிராகரித்தல், தமிழ்நாட்டிற்கென தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதற்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்டு கடந்த ஜூலை 8-ம் தேதி சென்னையில் கல்வியாளர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள், கல்வியில் அக்கறையுள்ள பல்வேறு இயக்கப் பிரதிநிதிகள் ஒன்று கூடி விவாதித்து "மக்கள் கல்விக் கூட்டியக்கம்" எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்'' எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஆசிரியர் நியமனம் என்ற பேரில் சுமார் 3,000 பேரிடம் மோசடி: தொண்டு நிறுவனத்தலைவர் தலைமறைவு!

ABOUT THE AUTHOR

...view details