தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் கூலிப்படை - நடவடிக்கை எடுக்குமா காவல்துறை? - கூலிப்படை தலைவன் லெனின்

தாம்பரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கூலிப்படை தலைவன் லெனின் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

accused
கூலிப்படை

By

Published : Jun 18, 2023, 6:46 PM IST

சென்னை:தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்த கூலிப்படை தலைவனான லெனின் என்பவர் மீது கஞ்சா, ஆள் கடத்தல், கூலிக்கு கொலை செய்வது, நில மோசடி என பல்வேறு வழக்குகள் நிறுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆண்டு நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஒரு புறம்போக்கு நிலத்தை விற்க முயன்றபோது, அதே பகுதியை சேர்ந்த சாதிக் என்பவர் போலீசில் புகார் அளித்து, அந்த நிலத்தை சட்டவிரோதமாக விற்பதை தடுத்துள்ளார்.

இதை குறித்து அறிந்ததும் சாதிக் மீது ஆத்திரமடைந்த லெனின் மற்றும் அவரது கூட்டாளிகள் சாதிக்கை அவரது வீட்டிலேயே சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து தாம்பரம் துணை ஆணையரிடம் சாதிக் புகார் அளித்துள்ளார். இதனால் காவல்துறையிடம் சிக்கினால் கண்டிப்பாக என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற பயத்தில், லெனின் கடந்த பிப்ரவரி மாதம் சேலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறை சென்றார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்த லெனின், இனி சாதிக்கை விட்டு வைத்தால் ஏதாவது ஒரு வகையில் நமக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பார் என்று எண்ணி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி, மூன்று நாட்களுக்கு முன்பாக சாதிக்கை கொலை செய்வதற்காக துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களை எடுத்துக் கொண்டு காரில் பின்தொடர்ந்துள்ளார்.

தன்னை யாரோ பின் தொடர்வதை அறிந்த சாதிக், இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பித்து ஓடியுள்ளார். இதை பார்த்த லெனின் மற்றும் அவனது கூட்டாளிகள் துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி சாதிக்கை துரத்தியபோது, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்த மூன்று தோட்டாக்கள் அடங்கிய மேகஸின் கீழே விழுந்துள்ளது. இதைப் பார்த்து அங்கு பொதுமக்கள் கூடினர். கூட்டம் சேர்ந்ததால், கீழே விழுந்த தோட்டாக்களை எடுக்காமல் லெனின் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பியோடிவிட்டனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சாதிக் மற்றும் அவருக்கு ஆதரவாக இஸ்லாமிய ஜமாத்தை சேர்ந்தவர்கள் துணை ஆணையரிடம் புகார் அளித்ததை அடுத்து, நடுவீரப்பட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் துணை ஆணையர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்ததாக கூறப்படுகிறது. கூட்டத்தில், பொதுமக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் கூலிப்படை தலைவன் லெனின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூலிப்படை தலைவன் லெனின் மற்றும் அவனது கூட்டாளிகளால் கொலை, அடிதடி போன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் தாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் நடுவீரப்பட்டு பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த கும்பல் இளைஞர்களுக்கு கஞ்சா போன்ற போதைப்பொருட்களையும் பழக்கி விடுவதாகவும், இவர்களது அட்டூழியங்களை போலீசார் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காமெடி நடிகரின் காலை உடைத்த பாஜகவினர் - மனைவி உள்பட 6 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details