சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகள் கிராமங்கள் முழுவதும் சென்றடைந்திருக்கின்றன. கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முதலமைச்சர் கூறியது போல 'வீட்டில் இருங்கள், விலகி இருங்கள், விழிப்புடன் இருங்கள்'.
ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதைக் கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவித்து வருகிறார். மூத்த அலுவலர்கள் அடங்கிய சிறப்பு பணிக் குழுவையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க உயர்மட்ட குழுவையும் அரசு அமைத்துள்ளது. இந்தியா பல சவால்களை சந்தித்திருக்கிறது. ஒழிக்க முடியாது என்று சொன்ன பெரியம்மையை ஒழித்துவிட்டோம். போலியோவையும் ஒழித்துக் காட்டினோம். எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியா திறன் பெற்றிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாதது இந்த கரோனா வைரஸ். கரோனா வைரஸ் முதல் நிலை, இரண்டாம் நிலையை கடந்து மூன்றாம் நிலையான சமூகப் பரவலை அடைந்துள்ளது. அதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் இருந்து 3 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும். அதன் மூலம், நாம் மூன்றாவது கட்டத்துக்கு செல்லவிடாமல் தடுக்க முடியும். கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கென தமிழ்நாடு அரசு 3,850 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மக்கள் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.