சென்னை: சென்னை பரங்கிமலை கலைஞர் நகரைச் சேர்ந்தவர், முதல் நிலைக் காவலர் வீரசெல்வம்(34). இவர் தற்போது பல்லாவரம் காவல் நிலையத்தில் பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் பல்லாவரம், பொன்னியம்மன் கோயில் தெருவில் இரவு நேர ரேந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காவலரை இடிப்பது போல் வந்துள்ளனர்.
இதனால் அவர்களது இருசக்கர வாகனத்தின் கைப்பிடியைப் பிடித்து காவலர் நிறுத்த முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் காவலரின் கையைப் பின்னால் மடக்கிப் பிடித்து கொள்ள ஒருவர் காவலரை முகத்தில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த காவலருக்கு முகத்தாடை, மற்றும் மூக்கில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதையும் படிங்க: பராமரிக்க முடியாத கோயிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் - பொன் மாணிக்கவேல்
இச்சம்பவத்தைப் பார்த்த பொது மக்கள் சிலர் உடனடியாக மதுபோதையில் காவலரைத் தாக்கிய 3 பேரையும் மடக்கிப் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லாவரம் காவல்துறையினர் விரைந்து வந்து மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்த விசாரணையில் காவலரைத் தாக்கியவர்கள் பம்மல் பகுதியைச் சேர்ந்த ரோகித்(23), விக்னேஷ்(25), முகமது ஆசிப்(23), என்பது தெரியவந்தது. குடிபோதையில் இருந்ததால் சீருடையில் இருந்த காவலரை தெரியாமல் தாக்கிவிட்டதாக வாக்குமூலம் அளித்தனர்.
காயமடைந்த காவலர் சிகிச்சைப்பெற்று பின்னர் கொடுத்தப்புகாரின் பேரில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பது, பொது ஊழியரை தாக்கியது, மிரட்டல் விடுப்பது, ஆபாசமாகப் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து பணியில் இருந்த காவலரை தாக்கியதாக மூவரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். பணியில் காவலரை தாக்கிய சம்பவம் பல்லாவரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :காணாமல் போன 6 வயது சிறுவன் தண்ணீர் டேங்கில் சடலமாக மீட்பு.. 17 வயது சிறுவன் கைது.. தருமபுரியில் நடந்தது என்ன?