தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போதுவரை திறக்கப்படாமல் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதற்கு மாற்றாக தனியார் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இணைய வழியாக வகுப்புகள் எடுத்துவருகின்றனர். தனியார் பள்ளிகளில் தற்போது இணைய வழி கல்வியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இது எந்த அளவில் சாதகமாக இருக்கும் என்கிற கேள்வியை மனிவள மேம்பாட்டு அலுவலர், சத்தியநாராயணனிடம் கேட்ட போது, "தற்போது தனியார் பள்ளிகளில் இணைய வழியில் பயிலும் மாணவர்கள், இதற்காக அவர்களின் பெற்றோருடைய செல்போன்களையோ அல்லது புதியதாகவோ வாங்கி பயன்படுத்திவருகின்றனர். இதற்காக குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இது தவிர ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகளில் பாடம் கற்கும் மாணவர்கள் ஜூம் (zoom) போன்ற செயலிகள் மூலம் குறைந்தபட்சம் 2 ஜிபி அளவிற்காகவது இணைய சேவைக்காக செலவிடும் நிலை ஏற்படுகிறது.
ஒரு வீட்டில் இரண்டு மாணவர்கள் இருக்கும்பட்சத்தில் இருவருக்கும் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செல்போன்கள் வாங்க வேண்டும். அவற்றிற்கு தினந்தோறும் 2 ஜிபி என கொண்டாலும் இரண்டு மானவர்களுக்கும் சேர்த்து மாதம் ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்ய வேண்டும்.