சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக வணிக வளாகங்கள், அங்காடிகள் உட்பட பல்வேறு பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல், சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல் போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மாநகராட்சிக்கு தெரியப்படுத்தவும்
மேலும், திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்குள் பங்கேற்பதை உறுதி செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு இணையதளத்தின் வாயிலாக தெரியப்படுத்த உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (ஏப்ரல்.9) முதல் இதுநாள் வரை கரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5,907 நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் 29,096 தனிநபர்களிடமிருந்து ரூ.3.18 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.