சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.81 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், சென்னை துறைமுக அறக்கட்டளை, இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றிடம் அனுமதி, ஆட்சேபனை இல்லாச் சான்றிதழைப் (NOC) பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த மாதம் 31ம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, திமுக, பாஜகவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேனா நினைவு சின்னத்தை நிறுவினால் அதை உடைப்பேன் என சீமான் கூறியதால், திமுகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூட்டத்தில் பங்கேற்ற 34 பேரில் 22 பேர் திட்டத்தை வரவேற்றுள்ளனர். 12 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்" என கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேனா சின்னத்துக்கு எதிராக திருமுருகன் காந்தி கருத்தை பதிவு செய்த நிலையில், அவர் ஆதரவாக பேசியதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடல்நீர் மட்டம் உயர்வை தடுக்க புவி வெப்பமயமாதலை குறைத்தால் மட்டுமே சாத்தியமாகும். இதுதொடர்பாக தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுப்பது பலனளிக்காது. தமிழ்நாட்டின் வரலாற்று நிகழ்வுகளை அனைத்து பொதுமக்கள் அறியும் வகையிலும், கடல் நீர்மட்டம் உயர்வு உள்ளிட்ட கடல்சார் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டும் இப்பேனா நினைவுச்சின்னத் திட்டம் நிறுவப்பட வேண்டுமென விரும்புகிறேன்" என திருமுருகன் காந்தி பேசியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.