சென்னை: எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் இயக்குனர் ரெமா சந்திரமோகன், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு குறித்து ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யே பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், "குழந்தைகளுக்கு ஊட்டசத்து என்பதை கர்ப்ப காலத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இளம் பருவம் என கூறுப்படும் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு உணவில் விருப்பு வெறுப்பு வருகிறது. இந்த வயதில் அவ்வளவாக சாப்பிடுவதில்லை.
இதனால், உடல் பருமனாக இருப்பதையும் மிகவும் குறைவான எடையுடன் இருப்பதையும் பார்க்கிறோம். 50 சதவீதம் பெண்கள் ரத்தசோகை நோயுடன் இருக்கின்றனர். இதனால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன், பிறக்கும் குழந்தைகளும் குறைவான எடையுடன் பிறக்கும்.
எனவே அவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளை அளிப்பது, சாப்பிட்டும் போது ஊட்டசத்து மிகுந்த உணவை அளிப்பதுடன், உடலை பாதிக்கும் ஜங்க் புட் போன்றவற்றை தவிர்ப்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கான கர்ப்ப காலம் 21 வயதிற்கு மேல் இருந்தால் அவர்களின் உடல் நலன் சரியாக இருக்கும். எனவே 21 வயதிற்கு மேல் திருமணம் செய்து குழந்தைப் பிறப்பது நல்லது.
குழந்தை பிறக்கும் மாதமும் முக்கியமானதாகும். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தை எடைக் குறைவாக இருக்கும். தாய்பால் கொடுப்பது முக்கியமானது. குழந்தை பிறந்த உடனே 6 மாதம் தாய்பால் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 6 மாதம் கழித்து இணை உணவு அளிக்க வேண்டும்.
அப்போது, குழந்தைகளுக்கு டின் உணவை அணுகாமல், வீட்டில் சமைக்கும் உணவை கொடுக்க வேண்டும். முதலில் குழந்தைக்கு உணவை கொழைய வைத்து கொடுக்க வேண்டும். 10 மாதம் கடந்த பின்னர் முட்டை சேர்த்துக் கொடுக்கலாம். கலோரி அதிரிக்க எண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வயதிற்கு மேல் வீட்டில் சமைப்பதையே குழந்தைக்கு கொடுக்கலாம். சாப்பாட்டை காலை, மதியம், இரவு என 3 வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஊட்டசத்து அதிகரிக்கும் வகையில் உணவு அளிக்க வேண்டும். குழந்தை முதல் வயதில் தான் வேகமாக வளரும். அவ்வாறு கொடுக்கும் ஊட்டசத்துகள் குழந்தைகளிடம் உள்ள குறைபாட்டை சரிசெய்து விடும்.