ரேஷன் கடைகளை கண்காணிக்க சிசிடிவி பொருத்த உத்தரவிடக் கோரி மனு - ரேஷன் கடைகளில் சிசிடிவி பொருத்த கோரிக்கை
சென்னை: கள்ளச்சந்தையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி பொருத்தி கண்காணிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 32 ஆயிரத்து 722 ரேசன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த அத்தியாவசிய உணவு பொருட்களை பெறுவதற்கு 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு முதல் இலவசமாக அரிசி வழங்கி வருகிறது. இதே போல் குடும்ப அட்டை தாரர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கும் வகையில் மாதம்தோறும் 35 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கோதுமையை பொறுத்தவரை 34 ஆயிரத்து 890 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவுதல் காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பை இழந்து வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வந்தது. ஆனால், பயனாளர்களுக்கு இது முழுமையாக சென்றடையவில்லை என்றும், குறிப்பாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முழுமையான அளவில் வழங்கப்படாமல், கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தடுக்க அனைத்து ரேசன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க உத்தரவிடக் கோரி சிரில் அலெக்சாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.