சென்னை:சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் ரவீந்தரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், ’’கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் நியமிக்கப்பட்ட 160 டயாலிசிஸ் டெக்னீசியன்களை, முதல்வர் மருத்துவக் காப்பீடு மூலம் அவுட்சோர்சிங் முறைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளதை உடனடியாக கைவிடவேண்டும். அது மட்டுமின்றி, அவர்களின் ஊதியமும் ரூபாய் 20 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக் குறைப்பு நியாயமற்றது. குறைந்த பட்ச ஊதியச் சட்டத்திற்கு எதிரானது. எனவே, உடனடியாக ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
சிறுநீரக மருத்துவப் பிரிவு துறைத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும். தற்போது பணியாற்றி வரும் அனைத்து டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும். தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் 4 பேர் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 3,85,878 ஹீமோ டயாலிஸிஸ் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மூன்று டயாலிசிஸ் படுக்கைகளுக்கு ஒரு டயாலிசிஸ் டெக்னீசியன் இருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் டயாலிசிஸ் டெக்னீசியன்களுக்கான, புதிய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புப் பட்டை அணிந்து பணிக்குச் செல்லும் போராட்டம் ஏப்ரல் 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 12ஆம் தேதி சென்னையில் நடத்தப்படும்.