சென்னை:ஒன்றிய அரசைக் கண்டித்து கடந்த மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடுமுழுவதும் தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டிலும் தொழிற்சங்கத்தினர், பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் திமுகவிற்கு ஆதரவளிக்கும் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அண்ணா தொழிற்சங்கத்தினர், ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பேருந்துகளை இயக்கினர்.
இந்தநிலையில், போராட்டத்தில் பங்கேற்று பணிக்கு வராதவர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் எனப்போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தவரை சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதல்நாளில் 90 விழுக்காடு ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றும், ஆனால் போராட்டத்தின் இரண்டாவது நாள் 90 விழுக்காடு ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர் என்றும் மாநகர போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.