சென்னை: ஆந்திரா உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23ஆம் தேதி குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குப் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ”சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பிறந்த நீதிபதி பட்டு தேவானந்த், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் கண்ணியம் உண்டு எனத் தீர்ப்பளித்துள்ளார்” என பாராட்டிப் பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்த குறுகிய காலத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், குறிப்பாக ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை முடித்து வைத்திருப்பதாகவும் பாராட்டினார். இதேபோல பிற வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், நீதிபதி பட்டு தேவானந்தாவை வரவேற்றுப் பேசினர்.