சென்னை:ஈடிவி பாரத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் சாதிவாரி கணக்கெடுப்பு உட்பட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நீங்கள் கடிதம் எழுதி உள்ளீர்கள்.. ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதா? என ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு சமூகநீதி மண். இன்றைக்கு இந்தியாவில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மண். சாதிவாரி கணக்கெடுப்பைப் பொறுத்தமட்டில், 'சென்ஸஸ்' என்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் நிர்வாகப் பட்டியலில் இருக்கிறது. அதனால்தான் தி.மு.க.வும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 'சாதிவாரி கணக்கெடுப்பு' 2011-இல் துவங்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த பா.ஜ.க. அரசு அந்த கணக்கெடுப்பு முடிவை வெளியிடவில்லை.
அமைச்சரவையிலேயே 2015-இல் இதற்காக நிபுணர் குழு அமைத்தும் இன்று வரை சாதிவாரி கணக்கெடுப்பின் அந்த நிபுணர் குழு அறிக்கையையும் வெளியிடவில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரை மூலம் எப்படி 27 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்தியா முழுமைக்கும் உள்ள இளைஞர்களுக்கு ஒன்றிய அரசு வேலை வாய்ப்பு - கல்வியில் இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததோ அது போல ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதி வாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறேன்" என்று பதில் அளித்துள்ளார்.
இந்த பேட்டியை சுட்டிக்காட்டி இன்று அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சிக்கலில் தமிழக அரசின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்க்கும் போது, சமூகநீதிக்கு எதிரான சக்திகளால் தமிழக முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகிறாரோ" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
"தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது. மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சமூகநீதியை வழங்கும் என்பதால், மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கூறியுள்ளார்”.