சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், “பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசால் 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொழிபெயர்ப்பு பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.
அவ்வகையில், முதற்கட்டமாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் 2019ஆம் ஆண்டு பிப்.19ஆம் தேதி அன்று வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, பிரெஞ்சு, ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (செப்டம்பர் 8) வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.,, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் (அ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.