சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் நவம்பர் 21ஆம் தேதி ஆராதனை ஜெப கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தாம்பரத்தை சேர்ந்த பியூலா செல்வராணி பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசினார். அப்போது வணிகர்கள் குறித்தும் குறிப்பிட்ட ஒரு சமுதாயம் குறித்தும் இழிவாக பேசினார்.
இந்நிலையில் பெண் மதபோதகரை கைது செய்ய வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் அளித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் வணிகர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மதபோதகர் பியூலா செல்வராணி பேசியுள்ளார். பெண்களை சகோதரிகளாகவும், தாய்மார்களாகவும் வணிகர்கள் நினைத்து வணிகம் செய்து வருகிறோம். டிஜிபியை சந்தித்து அவர் இனிமேல் மத போதகம் செய்யக்கூடாது என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
இதுகுறித்து நாளை (நவ.26) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல் ஆணையர்களிடம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட உள்ளது.
இந்தப் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாடார் சமூகத்திற்கு எதிராக பேசிய பெண் பாதிரியார்; காவல் நிலையத்தில் புகார்