சென்னை:நாடாளுமன்ற சிறப்புக்கூட்டுத் தொடருக்காக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று காலை 10:05 மணிக்கு டெல்லி செல்லவிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம் இயந்திர கோளாறு காரணமாக தாமதமாகப் புறப்பட்டது.
இதையடுத்து அந்த விமானத்தில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி செல்ல இருந்த, தமிழ்நாடு எம்பிக்கள் குழுவினர், காலை 11:30 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்ல இருந்த மேலும் 150-க்கும் மேற்பட்ட பயணிகள், சென்னை விமான நிலையத்தில் விமானங்களின்றி தவித்தனர்.
சென்னையில் இருந்து காலை 10:05 மணிக்கு, டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், 168 பயணிகள் டெல்லி செல்ல இருந்தனர். இந்த விமானத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் குழு அமைச்சர் துரைமுருகன் தலைமையில், டெல்லி செல்வதற்காக காலை 9 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏறுவதற்காக தயாராக இருந்த நிலையில் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இந்த ஏர் இந்தியா விமானம் வழக்கமாக டெல்லியில் இருந்து, சென்னைக்கு காலை 8:50 மணிக்கு சென்னை வந்துவிட்டு, அதன் பின்பு காலை 10:05க்கு மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்லும். ஆனால் இந்த விமானம் இன்று வழக்கத்தை விட முன்னதாக காலை 8:20 மணிக்கு சென்னை வந்த நிலையில், டெல்லி செல்லும் பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு அதிகாரிகள் தயாரானார்கள். பயனத்துக்கு தயரான ஏர் இந்தியா விமானத்தில், இயந்திர கோளாறு இருப்பதாகவும், அதை சரி செய்த பின்னரே விமானத்தை இயக்க வேண்டும் என, விமானி குறிப்பு எழுதி வைத்திருந்தது நிலையில், விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.