சென்னை:மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று (நவ. 23) இரவு டெல்லி மற்றும் அகமதாபாத் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமான நிறுவனத்தின் 2 விமானங்கள், பல மணி நேரம் தாமதமாகியதால் 300க்கும் மேற்பட்ட பயணிகள் அவதுக்குள்ளாயினர்.
இதனால், இரண்டு விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகளும், விமான நிலையத்திற்குள் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் கவுண்டர்கலை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் விமான நிலையத்தில் பரபரப்பு.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று(நவ.23) மாலை 6:25 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் செல்வதற்காக 154 பயணிகள் மாலை 5 மணிக்கு முன்னதாகவே சென்னை விமான நிலையம் வந்து பாதுகாப்பு சோதனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு தயாராக இருந்தனர்.
ஆனால், எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமாக வருவதால், இந்த விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரவு 8 மணி வரை விமானம் புறப்படவில்லை. இதனால், பயணிகள் விமான நிலையத்திற்குள்ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அமைதி படுத்தினர். அதோடு விமானம் இரவு 9:25 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனர்.
இதனையடுத்து, 9:25 மணிக்கும் விமானம் புறப்படாததால், 10 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று உறுதியாக தெரிவித்தனர். ஆனால், இரவு 10 மணிக்கு விமானம் புறப்படவில்லை. இதையடுத்து பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சென்னையிலிருந்து இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட்ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 162 பயணிகளும், டெல்லி பயணிகளுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பயணிகளை மீண்டும் அமைதி படுத்திய அதிகாரிகள், விமானங்கள் புறப்பட தயாராகிக் கொண்டிருக்கிறது என்று கூறி பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு ஏற்பாடுகளை செய்தனர். இதனால், மாலை 6:25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக, இரவு 10:35 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதைப்போல் இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமாக இரவு 10:50 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
ஒரே நேரத்தில், ஒரே விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து செல்ல 4 மணி நேரத்திற்கு மேல் தாமதமாகியதால் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் அவதி அடைந்ததோடு, விமான நிலையத்திற்குள் வாக்குவாதங்கள் செய்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு.. முன்ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!