சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையம், உள்நாட்டு விமான நிலையம் ஆகிய இரண்டிலுமே கரோனா காலத்திற்குப் பின்பு பயணிகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. கரோனா காலத்திற்கு முன்பு நாள் ஒன்றுக்கு பயணிகளின் எண்ணிக்கை சுமார் 40,000 மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 50 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உள்நாட்டுப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பயணிகள் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன், இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிக அளவில் சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னை விமான நிலையம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அனைத்துச் சோதனைகளும் முடிந்து விமானங்களில் ஏறச்செல்வதற்கு முன்பாக காத்திருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உணவு ஸ்டால்களு உள்ளன.
மேலை நாட்டுப்பயணிகள் இந்திய உணவை விரும்பிச் சாப்பிடுவதால் அவர்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்னதாக அந்த உணவு ஸ்டால்களில் இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகளை விரும்பி, சாப்பிட்டு விட்டு, அதன் பின்பு விமானப் பயணம் மேற்கொள்கின்றனர். அதேபோல் விமானங்களில் கொடுக்கப்படும் உணவுகளில் விருப்பமில்லாத சிலரும் இங்கு சாப்பிட்டுச் செல்வார்கள்.
இதனால் உணவு ஸ்டால்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சமீப காலமாக இந்த உணவு விடுதி பகுதிகளில் புறாக்களின் கூட்டம் படையெடுத்த வண்ணம் உள்ளது. கூட்டம் கூட்டமாக புறாக்கள் பறந்து வந்து பயணிகள் உணவருந்தும் டேபிள்களில் வந்து அமர்வது, மேலே உள்ள போர்டுகளில் அமர்வது, புறாக்கள் எச்சங்கள் போடுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் பயணிகள் அருவருப்புடன் முகம் சுளிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பலர் உணவை முழுமையாக சாப்பிடாமல் பாதியிலேயே டேபிளில் வைத்துவிட்டு வெளியேறும் நிலையும் ஏற்படுகிறது. இதைப்போல் கடந்த ஆண்டில் கரோனா வைரஸ் உருமாறி, ஒமைக்ரான் நோய்த்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியபோது ஒமைக்ரான் வைரஸ் கிருமி பரவுவதற்கு புறாக்களின் எச்சம், ரத்தம் போன்றவைகளும் ஒரு காரணம் என்று இந்திய சுகாதாரத்துறை எச்சரித்தது.