சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் பெய்த கனமழையின் காரணமாக, அந்தந்த மாவட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பு பெருமளவு சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளத்தின் அடிப்பகுதியிலிருந்த ஜல்லி கற்கள் முழுவதும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.
இதையடுத்து கடந்த டிச.17ஆம் தேதி சுமார் 9:15 மணி அளவில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலயத்திற்கு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர், ரயிலில் சிக்கி இருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்கள் பேருந்து மூலம் மணியாச்சிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் நேற்று (டிச.19) இரவு புறப்பட்டு இன்று (டிச.20) மதியம் தாம்பரம், எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பயணி புகழ் கோவன் கூறுகையில், “மழை வெள்ளம் அதிக அளவில் இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரவு 10 மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்டது. அன்று இரவே பயணிகள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிடலாம் என நினைத்திருந்தோம். ஆனால், நேரம் செல்ல செல்ல அதிக அளவில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியதால் யாரும் ரயிலை விட்டு இறங்க முடியாத நிலையில் அங்கே மாட்டிக் கொண்டோம்.
இந்த நிலையில் மறுநாள் காலை முதல் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டில் இருந்த பொருட்களை வைத்து தங்களுக்கு காலை, மதியம், இரவு 3 வேளையும் உணவுகள் சமைத்துக் கொடுத்தனர். பின்னர், இரண்டு நாட்கள் கழித்து பேரிடர் மீட்பு படை வந்த பிறகு தான் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தற்போது சென்னை வந்துள்ளோம். இதில் முதல் இரண்டு நாட்களில் அரசு தங்களை மீட்க வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்த பிறகுதான் மீட்பு படை அதிகாரிகள் வந்தனர்.
அங்கிருக்கும் கிராம மக்கள் அனைவரும் வீட்டிலிருந்த பொருட்களை வைத்துச் சமைத்து எங்களுக்கு வழங்கினர். இதுபோன்று உலகில் வேறு எங்கும் நடக்காது. புதுக்குடி மற்றும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம். சென்னையில் பெய்த மழையில் கூட இந்த அளவில் தாங்கள் சிக்கியது இல்லை. ஆனால் அங்கு வெள்ளநீர் அதிகரிக்க, அதிகரிக்க அனைவரும் பயத்தில் இருந்தோம்” என கூறினார்.