சென்னை: துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள், சுற்றுலாப் பயணிகளாக துபாய்க்கு சென்று, இந்த விமானத்தில் திரும்பி வந்தனர்.
அவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் உடைமைகளை சோதித்ததில் உடைமைகளில் எதுவும் இல்லை. அதன்பின்பு பயணிகளை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதித்தனர்.
சோதனையில் பயணிகள் தங்கப் பசை பாக்கெட்டுகளை, முதுகில் டேப் போட்டு ஒட்ட வைத்துக்கொண்டு, அதற்கு மேல் பனியன், சர்ட் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பயணிகளின் முதுகுகளில் ஒட்டப்பட்டிருந்த தங்கப்பசை பாக்கெட்டுகளை எடுத்து பிரித்து பார்த்தபோது, அதில் 1.5 கிலோ தங்கப் பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 73.28 லட்சம் எனத் தெரிகிறது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் 2 பயணிகளை கைது செய்து தங்கப் பசையை பறிமுதல் செய்தனர்.