சென்னை: தமிழ்நாடு பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழுவில் நிதித்துறை செயலாளரை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்திருந்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, 'உயர் கல்வித்துறையின் ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலாளர் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவராக நிதித்துறை செயலாளரைச்சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவைச்செயல்படுத்தும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா, பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, மனோன்மணியம், பெரியார், திருவள்ளுவர், அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச்செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு வகை செய்யும் வகையில், சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.