சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. 1990-களில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜாகண்ணு என்பவர் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். இவரது மனைவி பார்வதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல்செய்து, நீதி போராட்டத்தின்போது வெற்றிபெற்றாரா இல்லையா என்பதுதான் கதை.
ஜெய்பீம் உண்மைக் கதையைத் தேடி பயணித்த ஈடிவி பாரத்
ஜெய்பீம் உண்மைக் கதையைத் தேடி பயணிக்கும்போது தன் கணவனுக்காகச் சட்டப்போராட்டம் நடத்தி நீதியை நிலைநாட்டிய பார்வதியை சென்னை முகலிவாக்கம் குன்றமேடு பகுதியில் சென்று பார்த்தோம். அவர் வாழும் பகுதி மிகவும் மோசமாக இருந்தது.
வாழ்வதற்கு ஏற்றத் தகுந்த சூழ்நிலை இல்லாத அளவிற்கு தனி குடிசையில் பார்வதியுடன் மகள், மருமகன், இரண்டு பேரன்கள் சேர்த்து ஐந்து பேர் வசித்துவருகின்றனர். அதிக காற்றோ மழையோ அடித்தால், குடிசை இன்றி நிர்க்கதியாக இருக்கும் சூழ்நிலையில் பார்வதி தற்போது இருக்கிறார்.
நாங்க குறவர் சமூகம்
இதுபற்றி பார்வதி கூறும்போது, "ஜெய்பீம் படத்தைப் பார்த்து கண்கலங்கிவிட்டேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நாங்க கடலூர் மாவட்டத்தில் விவசாய வேலை செஞ்சிட்டு இருந்தோம். என்னுடைய கணவரைத் தேடி போலீஸ்காரங்க வந்தாங்க, நகை பணம் என்னுடைய கணவர் திருடிட்டாங்கனு சொல்லிட்டு, என்னையும், என் கணவரின் அண்ணன், தம்பியையும் கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டாங்க.
அங்க எங்கள போலீஸ்காரங்க, பணத்தை எங்க வச்சிருக்கீங்க, உன் புருஷன் எங்கனு? கேட்டு அடித்து துன்புறுத்தினார்கள். நானும் மற்ற இருவரும் வலியால் துடித்துக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரம் கழிச்சி என்னுடைய கணவர் ராஜாகண்ணுவை போலீஸ் ஸ்டேஷனுக்கு அடித்து இழுத்துட்டு வந்தாங்க. என்னைய வீட்டுக்கு அனுப்பிட்டு போய் சாப்பாடு எடுத்துட்டு வா அப்டின்னு சொல்லி அனுப்பிட்டாங்க.
நான் மறுபடியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருந்தபோது அரை நிர்வாணமா என்னுடைய கணவர் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்தாரு. லாக்கப் அறையில் முழுசா ரத்தம் பீறிட்டுத் தெளிச்சு இருந்துச்சு. இதைப் பார்த்ததும் எனக்கு அழுகை தாங்க முடியாம அழுதுட்டு இருக்கேன். அப்பகூட போலீஸ்காரர் விடாம எனது கணவரை அடிச்சுட்டே இருந்தாரு.
ஒரு கட்டத்தில் என்னைய வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, நான் வீட்டிற்குப் போறதுக்குள்ள, ராஜாகண்ணு போலீஸ் ஸ்டேஷனல இருந்து தப்பித்துவிட்டார் என்று சொன்னாங்க. அதுமட்டுமில்ல அவருடைய தம்பியும் அண்ணனும் தப்பிச்சிட்டாங்கனு சொன்னாங்க. அப்போ இத பத்தி எனக்குத் தெரிஞ்ச கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவிந்தன் கிட்ட சொல்லி, என் கணவரை தேட ஆரம்பிச்சோம்.
அப்புறம் என் கணவர் இறந்ததாகத் தகவல் தெரிந்ததும், அந்தப் போலீஸ்காரர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து சட்டப் போராட்டம் நடத்தினோம். நீதியரசர் சந்துரு, கோவிந்தன் இல்லைனா 13 வருஷம் கஷ்டப்பட்டு போராடி வெற்றி கிடைக்காம போயிருக்கும். ஜெய் பீம் படத்தில், எங்கள இருளர் சமூகமாகக் காட்டினாங்க, நாங்க குறவர் சமூகம், நாங்க விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஜெய்பீம் படத்தைப் பத்தி எல்லாரும் இப்ப கேள்விப்பட்டதும் என்னைப் பற்றி வந்து விசாரித்து போறாங்க.