சென்னை குன்றத்தூரில் 53 ஏக்கர் நிலம் வாங்கி, வீடு கட்டும் திட்டத்தை மேற்கொண்டு வரும் தனசேகரன் என்பவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தங்கராஜ், அம்புரோஸ், காவேரி உள்ளிட்ட 14 பேர் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து, பணம் கேட்டு மிரட்டுவதால், தனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அடுத்தவர்கள் நிலத்தை அபகரிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர் என்று ஏராளமான புகார்கள் வருகின்றன. அரசியல் கட்சி என்பது பொதுமக்கள் நலனுக்காக பாடுபட வேண்டும், அதற்கு மாறாக அரசியல் கட்சியின் பெயரை சொல்லி நில அபகரிப்பு வேலைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தொண்டர்களை, கட்சியின் தலைவர்கள் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சரியான நேரம் எனவும், தவறினால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு உள்ள நற்பெயருக்கு குந்தகம் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் செலவுக்கு பணம் கேட்பது, அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.