தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் முகவர்களை நியமிக்க இயலாமல் திணறும் கட்சிகள் - வாக்கு எண்ணிக்கை மையங்கள்

தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஏப்ரல 6ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துள்ள 76 இடங்களில் தங்கள் கட்சியின் முகவர்களைக் கூட நியமிக்க முடியாத நிலையில் சில அரசியல் கட்சிகள் உள்ளன.

parties-that-are-unable-to-appoint-agents-at-vote-counting-centers
parties-that-are-unable-to-appoint-agents-at-vote-counting-centers

By

Published : Apr 11, 2021, 3:29 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவினாலும், வாக்குச்சாவடி நிலையில் அதிமுக, திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகவர்களாக ஏப்ரல் 6ஆம் தேதி முதல் பணியில் இருந்தனர். மற்ற கட்சிகள் சார்பில் வாக்குச்சாவடிக்கு முகவர்களை முழுவதுமாக நியமிக்க முடியவில்லை.

மேலும் சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு வாக்குச்சாவடியில் முகவர்கள் தேவை என்பதற்காக சிலரை சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வைத்து அவர்களை பயன்படுத்திக் கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. தேர்தலில் போட்டியிட சின்னம் பெற்ற சுயேட்சைகளில் சிலர் பரப்புரை செய்யாமல், வாக்குப்பதிவு தினத்தில் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதை பிறருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியிலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் இரண்டு கோடியே 26 லட்சத்து மூன்றாயிரத்து 156 ஆண்களும், இரண்டு கோடியே 31 லட்சத்து 71ஆயிரத்து 736 பெண்களும், ஆயிரத்து 419 திருநங்கைகளும் என நான்கு கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் 72.81 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ள 75 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு துணை ராணுவப்படை, மத்திய பாதுகாப்புப்படை, தமிழ்நாடு காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் காண்காணித்து வருகின்றனர். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குள் செல்ல முடிகிறது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வேட்பாளர்களின் அனுமதி பெற்ற முகவர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாவட்டத்தில் ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை நாடாளுமன்றத்தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அலுவலர் ஒருவர் சென்று வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் திமுக, அதிமுகவின் சார்பில் முகவர்களை நியமிக்க வேண்டும் எனக் கூறி உள்ளனர். திமுகவின் சார்பில் முகவர்களும் வேட்பாளர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கின்றனர். ஆனால், அதிமுகவில் ஒரு சில வேட்பாளர்கள் மட்டுமே 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கும் வகையில் நியமனம் செய்துள்ளனர்.

இது குறித்து திமுக ராயபுரம் வேட்பாளர் ஐடிரீம்ஸ் மூர்த்தி , டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் வேட்பாளர் எபினேசர் ஆகியோர் கூறும்போது, "வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் ஒரு பகுதியை மட்டுமே கண்காணிப்பு கேமரா மூலம் காண முடிகிறது. எனவே அனைத்துப் பகுதியில் நடைபெறுவதையும் பார்க்கும் வகையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று பிரிவுகளில் 8 மணி நேரம் வீதம் நாங்கள் முகவர்களை நியமனம் செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருகிறோம்" எனக் கூறினர்.

முகவர்களை நியமிக்க இயலாமல் திணறும் கட்சிகள்

அதிமுகவின் முகவர் கூறும்போது, "வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளோம். எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வேட்பாளர் செய்து தருகிறார். ஆனால் சில கட்சிகளில் வாக்குச்சாவடியில் முகவர்களை அமர்த்த முடியாத நிலை உள்ளதைப் பார்த்தோம். அதை இங்கும் எங்களால் காண முடிகிறது" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details